The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Overthrowing [At-Takwir] - Tamil Translation - Omar Sharif - Abridged Version
Surah The Overthrowing [At-Takwir] Ayah 29 Location Maccah Number 81
(உலக முடிவுக்காகச்) சூரியன் மங்க வைக்கப்படும்போது,
இன்னும் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
இன்னும் மலைகள் அகற்றப்படும்போது,
இன்னும் நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,
இன்னும் காட்டு மிருகங்கள் (ஊர்களில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
இன்னும் கடல்கள் தீ மூட்டப்படும்போது (இவ்வுலகம் முடிவுறும்).
இன்னும் உயிர்கள் (உடலுடன்) இணைக்கப்படும்போது,
இன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,
அவள் எந்தக் குற்றத்திற்காக கொல்லப் பட்டாள்? என்று.
இன்னும் (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,
இன்னும் வானம் அகற்றப்படும் போது,
இன்னும் நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,
இன்னும் சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,
ஓர் ஆன்மா தான் கொண்டு வந்ததை அறியும்.
ஆக, (பகலில்) மறைந்துவிடுபவை மீது சத்தியம் செய்கிறேன்!
விரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)
இரவின் மீது சத்தியமாக அது பின்செல்லும்போது,
காலைப்பொழுதின் மீது சத்தியமாக அது தெளிவாகி விடும்போது,
நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரயீல்) உடைய கூற்றாகும் (-அவர் மூலம் இறக்கப்பட்ட இறை வேதமாகும்).
(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்.
அங்கு (வானவர்களின்) கீழ்ப்படிதலுக்கு உரியவர், (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர். (அத்தகைய வானவத் தூதர் ஜிப்ரயீல் வாயிலாக இறக்கப்பட்ட கூற்றாகும் இந்த குர்ஆன்.)
உங்கள் தோழர் (-நபி முஹம்மது) பைத்தியக்காரராக இல்லை.
திட்டவட்டமாக, தெளிவான (வானக்) கோடியில் அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரயீலை)க் கண்டார்.
மறைவானவற்றில் (அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக) இல்லை.
அது (-குர்ஆன்) எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.
ஆகவே, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
அது அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரை யாகவே தவிர (வேறு) இல்லை.
உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும், அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்.)
அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நல்லறிவு பெற நீங்கள்) நாடமாட்டீர்கள்.

